Wednesday, October 2, 2013

வருணகுலத்தான் பார்வையில் – போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும் விழுந்த துரையப்பாவும் – பகுதி 6

srimaavo
யாழ்பஸ்நிலையத்தில் வேண்டிவந்த மேலாடை அட்டையில் வு.N.வு என எழுதி வைத்துவிட்டு துரையப்பாவின் காரின் வரவை எதிர் பார்த்து தொடர்ந்தும் ஆவலுடன் இவர்கள் காத்திருந்தனர். இவர்களின் காத்திருப்பு வீண்போகவில்லை நண்பகல் கடந்து ஏறத்தாள 1.05 மணியளவில் வீதியில் நின்ற கிருபாகரன் கார்வருகிறது எனக்கூறினார்.
முன்திட்டமிட்ட படியே தலைவரும் கலாபதியும் துரையப்பாவை தாக்க தயாராகினர். பொன்னாலை வீதியில் கோவிலின் வலதுபுறமாக வேகமாக வந்தகாரின் முன் ஆசனத்தில் சாரதிக்கு அருகாமையில் துரையப்பா அமர்ந்திருந்தார். அவருக்கு பின்புறமாக யாழ் மாநகரசபை உறுப்பினர்களில் ஒருவரான  இராஜரட்ணமும் சாரதிக்கு பின்புறமாக யாழ் பலநோக்கு கூட்டுறவுசங்க அதிகாரிகளில் ஒருவரான யோகநாதனும் அமர்ந்திருந்தனர். வீதியின் இடதுபுறமாக அமைந்திருந்த கோவிலின் முன்பாக  சிறிது தூரத்தில் கார் நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட காரில் இருந்து இறங்கிய துரையப்பா தனது நிமிர்ந்த நடையுடன் கோவிலை நோக்கி நடக்கமுற்பட்டார் இந்நிலையில் வீதியின் வலதுபுறமிருந்து மடத்திலிருந்து  தலைவர்பிரபாகரன் துரையப்பாவை  நோக்கி  கலாபதி பின்தொடர  வீதியின் குறுக்காக   விரைவாக நடக்கத்தொடங்கினார்.
துரையப்பா காரில் இருந்து இறங்கி நடக்கத்தொடங்கவும் அவரைநோக்கிய நிலையில் இரண்டு இளைஞர்கள் வேகமாக முன்வருவதைக் கண்ட சாரதி சிவனு என்னநினைத்தாரோ? காரிலிருந்து இறங்கமுற்பட்டார். வேகமாக வீதியை கடந்து கொண்டிருந்த தலைவரின்  கரத்திலிருந்த துப்பாக்கி உடனடியாக சாரதியைநோக்கி எச்சரிக்கை வேட்டைத்தீர்த்த அதேகணத்தில்   துரையப்பாவை நோக்கித் திரும்பியது.
காருக்குமுன்பாக மூன்றுநான்கு காலடிகளை எடுத்து முன்நடந்து வந்திருந்த துரையப்பா இவைகளைக்கண்ட அதிர்ச்சியில் இருந்து மீளும்முன்னரே வீதியை விரைவாகக் கடந்து நேர்நின்ற தலைவரின் கரத்திலிருந்த 38ம்இலக்க ரக கைத்துப்பாக்கி ஆவேசத்துடன் முழுமையாக சீறியது. கணப்பொழுது சுதாகரித்துக்கொண்ட துரையப்பா  பின்புறம் திரும்பி ஓடமுற்பட்டார். ஆனால் அதற்கிடையில் திட்டமிட்டபடி காரின் பின்புறத்திற்கு கலாபதி வந்திருந்தார். ஒருபுறம் சுவர் மறுபுறம் கார் முன்னால் பிரபாகரன்  பின்னால் கலாபதி எத்திசையும் ஓடமுடியாத இறுதி முற்றுகை மரணபயம் கண்களை கவ்விக்கொள்ள காரின் இடதுபுறமாக முன்கதவேரம் குனிந்துகொண்ட   துரையப்பா பதுங்கமுயன்றார்.
துரையப்பாவிற்கு பின்புறமாக காரின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த இராஜரட்ணம் சாவகசமாக இறங்கி துரையப்பாவை  பின்தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார். அவ்வேளையில் காருக்கு முன்பாக வலது புறமிருந்து இரண்டு இளைஞர்கள் வேகமாக வருவதையும் வந்தவர்களில் ஒருவர் காருக்கு முன்பாக நேராக வந்து துரையப்பாவை சுடுவதையும் கண்டார். அதேநேரம் மற்றவர்  காரைச்சுற்றி  வருவதையும் கண்டார் உடனே தனக்கு அருகாமையில் வந்த அவரின் கையை வேகமாக எட்டிப்பிடித்தார்.  பாவம் அவர்  துரையப்பாவை இலக்காகக் கொண்டு காரின் முன்நடந்து தாக்கிய தலைவரையும் காருக்கு பின்புறம் ஓடிவர முயன்ற துரையப்பாவையும் ஒருகணம் ஏறிட்டுப்பார்த்த கலாபதி முன்னின்றவர் தனது கையைப்பிடித்ததும் வேகமாக தனது கையை இழுத்தவாறே துப்பாக்கியின் விசையை இழுத்தார்.
இழுத்தகையினால் வேகமாக சுட்டதனால் இலக்குத்தவறிய இரண்டு குண்டுகள் எதிரே இருந்த பழைய சுவற்றில் பாய்ந்தன. இவர் சுதாகரித்துக்கொண்ட நிலையில் மூன்றாவது குண்டு இராஜரட்ணத்தின் கையில்பாய்ந்தது. குண்டு பாய்ததும் இராஜரட்ணம் கோவிலை நோக்கி ஓடினார். இராஜரெட்ணம் ஓடியதும் கலாபதியின் பார்வை துரையப்பாவை நோக்கித்திரும்பியது. தலைவரின் கரத்திலிருந்து சினத்தோடு புறப்பட்டகுண்டுகளின் ஆற்றாமை கண்டு பின்வாங்கி ஓடிவரமுயன்ற துரையப்பா கலாபதியை பார்த்ததும் பின்புறமும் தப்பியோட வழியின்றி முன்கூறியவாறு அப்படியே காரின் முன்கதவோரம் பதுங்கமுயன்றார். அப்பொழுதும் குண்டுகள் அவரை ஊடுருவிப்பாய்ந்தன. அந்நிலையில் நிமிர்ந்த துரையப்பா அப்படியே காருக்கு முன்பாக சில அடிகள் நடந்துவந்தார் அப்பொழுதே அவர் உயிர் பிரிந்திருக்க வேண்டும் தலைவர் பிரபாகரனின்  கால்களிற்கு சிலஅடிகள் முன்பாக முகம்கவிழ மண்ணில் வீழ்ந்தார். விழுந்தவேகத்தில் எகிறித்திரும்பிய அவரது உடல் ஆகாயத்தைப் பார்த்தபடி நீட்டிநிமிர்ந்து அடங்கிப் போனது.
ஏற்கெனவே காரின் பின்சீட்டில் சாரதிக்கு பின்புறத்திலிருந்த யோகநாதன் இறங்கி ஓடிவிட்டிருந்தார். நடந்த அனைத்தையும் முன்னிருந்து பார்த்து  உயிர்ப்பயத்தில் செய்வதறியாது உறைந்திருந்த சாரதி ஜவகர்சிவனை தம்மிடமிருந்த வெற்றுத்துப்பாக்கியை காட்டிமிரட்டிய கிருபாகரனும் பற்றிக்கும் முன்திட்டமிட்டபடியே  காரிலேறி தயாராகவிருந்தனர். இவர்களின் நோக்கமெல்லாம் துரையப்பா ஆதலால் ஓடியவர்களை தொடர்ந்துதாக்கவோ அல்லது துரத்தவோ முனையவில்லை.
1974இல் யாழ்ப்பாணபல்கலைக்கழக திறப்புவிழாவில்
அல்பிரட்துரையப்பாவும் ஸ்ரீறிமாவோபண்டாரநாயக்காவும்
இதனால் விழுந்துகிடந்த துரையப்பாவை கலாபதி  மீண்டும் சுடமுயன்றார்.  ஆனால் துப்பாக்கி வெடிக்கவில்லை. இவர்களால் உருவாக்கப்பட்ட குண்டுகளாதலால் பழைய அத்துப்பாக்கியில் எஞ்சியிருந்த இறுதிக்குண்டு எங்கோ தடக்கிவிட்டது. இந்நேரத்தில் காரின் பின் கதவைத் திறந்து  வைத்திருந்த தலைவர் ‘எல்லாம் முடிந்தது ஓடிவா’ எனக் கூப்பிட்டார். இறுதியாக தலைவருக்கு அருகாமையில் காரின் பின்சீட்டில் கலாபதி ஏறி அமரவும் துரையப்பாவின்  வெள்ளைநிற போஜே 404 கார் பொன்னாலை கீரிமலை வீதியில் வேகமாக ஓடத்தெடங்கியது. இவையெல்லாமே சமகாலத்தில் ஒருசிலகணங்களில் நடந்துமுடிந்தது.
முன்திட்டமிட்டபடி ஆயக்கிளி வராமையினால் அனுபவமற்ற பற்குணமே காரை செலுத்திக்கொண்டிருந்தார். அவருக்கு அருகாமையில் கிருபாகரன் அமர்ந்திருந்தார். அவ்விடத்தைவிட்டு விரைவாக தப்பிச்செல்வதே  இவர்களது  நோக்கமாயிருந்தது. இதனால் மிகப்பதற்றத்துடன் பற்குணம் காணப்பட்டார்.  ஆனால் எப்பொழுதும் எச்சரிக்கை உணர்வுடன் சூழலைக்கண்காணித்து செயற்படும் தலைவர்பிரபாகரன்  திடீரென  ஜீப் என கூறினார். எதிரே நீண்டு கிடந்த வீதியின் கண்ணிற்கு எட்டிய  மறு அந்தத்தில் மிகச் சிறிதாக  ஜீப்பின் வரவு தெரிந்தது.  ஜீப் என தலைவர் கூறியதும் பற்குணம் ஜீப்பை பார்த்தாரோ இல்லையோ மேலும் பதட்டமுற்று  காரின் பிரேக்கையும் கிளச்சையும் சேர்த்து மிதித்துவிட்டார் போலும். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தகார்  இரண்டு தடவைகள்  தன்னைத்தானே சுற்றியபடி  அருகிலிருந்த  வயலுக்குள் பின்புறமாக இறங்கியது. எதிர்பாராத  இந்நிகழ்வால் அதிர்ச்சி யடைந்த  அனைவரும் காரைவிட்டு  இறங்கி ஓடினர் ஓடியஇவர்கள் எங்கு போகின்றோம்? எவ்வளவு தூரம்  போகின்றோம்? எனத் தெரியாமலே தோட்டங்கள் வயல்கள் சிறு ஒழுங்கைகள் ஊடாக ஓடியும் நடந்தும் விரைவாக சென்றனர். இவ்வாறு சென்ற பொழுது கிருபாகரனின் தந்தையின் நண்பரொருவரை சந்தித்தனர். அவரிடம் உரையாடிய வேளையிலேயே தாம்வந்து சேர்ந்தவிடம் சித்தங்கேணி என்பதைப்புரிந்து கொண்டனர்.மேலும் வேகமாக நகர்வுகளை மேற்கொண்ட அவர்கள் கண்ணில் தென்பட்ட முதல் பஸ்சிலேறி சுன்னாகம் பஸ்நிலையத்திற்கு வந்துசேர்ந்தனர். அங்கிருந்து யாழ்நகருக்கான 769ஆம் இலக்கபஸ்சில் பயணம்செய்து  இடையே இணுவிலில் பற்றிக்கும் கிருபாகரனும் இறங்கிக் கொள்ள தலைவரும் கலாபதியும் யாழ்ப்பாணம்  வந்து சேர்ந்தனர்.
அப்பொழுது நேரம் பிற்பகல் 6மணியை தொட்டிருந்தது. பஸ்சிலும் பஸ் நிலையத்திலும்; ‘துரையப்பாவை சுட்டாச்சு’ என ஏதோ எதிர்பார்த்த நிகழ்சி நடந்து விட்டதுபோல் துரையப்பா கொலை பற்றியே எங்கும் பேச்சாக காணப்பட்டது. அடுத்தநாள் பத்திரிகைமூலமே தாம் காரைவிட்டு ஓடிய இடம் கீரிமலைக்கு  அண்மையில்  உள்ள கருகம்பனை என்பதையும் எதிரேவந்த ஜீப்பில்  யாழ்ப்பாண பொலிஸ் அதிபரான ஜே.டீ.எம்.ஆரியசிங்கா தனது குடும்பத்தினருடனும் வேறு சில உயரதிகாரிகளுடன் சேந்தான்குளத்தில் இருந்து வந்து கொண்டிருந்ததையும் போராளிகள் அறிந்துகொண்டனர்.  1971 மார்ச் 11ந்திகதி யாழ் மெயின்வீதி பிறிமியர்கபே டிஸ்கோஅரங்க திறப்புவிழாவின் போது மாணவர்பேரவையின் பொன்.சிவகுமாரன் மற்றும் பொன்.சத்தியசீலனால் வைக்கப்பட்ட குண்டில் அதிஸ்டவசமாக உயிர் தப்பியவர். மீண்டும் 1972 டிசம்பர் 19இல் கொய்யாத்தோட்டத்தில் அமைந்திருந்த இவரது வீட்டின்மீது மாணவர்பேரவையைச் சேர்ந்த திசைவீரசிங்கம் மற்றும் இராஜன் போன்றோர் குண்டுவீசியபோது வீட்டில் இல்லாததால் துரையப்பா தப்பித்துக்கெண்டார். 1973- 1974 காலப்பகுதிகளில்  குறிப்பாக பொன்.சிவகுமாரனின் தியாகமரணத்தின்பின் தனது மரணபயத்தை அகற்றி சாதாரணமாக உலாவந்தவர். பொன்.சிவகுமாரனின் ஒருவருட நினைவுதினமும் ஒருமாதமும் கடந்திருந்த நிலையில் அவரைப்போலவே ஆயுதப்போரில் நம்பிக்கை கொண்டு அதனையே தமது வழியாக வரித்துக் கொண்ட தேசியத்தலைவர் பிரபாகரனும் அவரது நண்பனும் முதன்நிலைப் போராளியுமான கலாபதியும் துரையப்பாவின் துரோகப் பயணத்திற்கு முடிவு கட்டினர்.
துரையப்பாவின் மரணச்செய்தி குடாநாட்டில் அங்குமிங்குமாக ஓடும் ஊவுடீ பஸ்பிரயாணிகள் மூலம் பலஇடங்களிற்கும் எடுத்துச்செல்லப்பட்டு துரிதகெதியில் எங்கும்பரவியது. மதியம் 1.05இற்கு துரையப்பா சுடப்பட்ட செய்தி வல்வெட்டித்துறைக்கு மதியம் 2.30இற்கு தெரிந்துவிட்டது. எதிர்பார்த்து நின்ற நண்பர்களும் வல்வெட்டித்துறை சனசமூகநிலையத்தில் இருந்த சிவகுமாரனின் படத்தினை வணங்கியதுடன் அக்காலத்தில் வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்திருந்த ‘கலாநிதி ஸ்ரோர்’ கடையில் வாங்கிய இனிப்புகளையும் குளிர்பானங்களையும் மக்களிற்கு வழங்கி மகிழ்ந்தனர். விடயம் அறிந்தமக்களும் தாமும் அம்மகிழ்ச்சியில் கலந்து கொண்டு சந்தோசஆரவாரம் புரிந்து தமது மகிழ்வினை வெளிக்காட்டினர். ஒருமனிதனின் இறப்பில் ஏனையமனிதர்கள் மகிழ்படைவது மனிதநேயமற்றதே.
இதில் சந்தேகமில்லை. ஆனால் துரையப்பாவின் முடிவு தனி ஒருவனின் இறப்பல்ல. அதனை ஈழத்தமிழரின் விடுதலைப்போர் வரலாற்றின் பிறப்பென்றே கொள்ளலாம்.  அதுவரை ஈழத்தாயின் வயிற்றில் கருவாகி உயிராகி அங்காங்கே உதைத்துக்கொண்டிருந்த ஆயதப்போராட்டம் என்னும் குழந்தை துரையப்பா மீது தீர்க்கப்பட்ட வேட்டொலிகளுடன் தாயின் கருப்பையை கிழித்துக்கொண்டு வரும் குழந்தையைப்போல் தமிழ்ஈழ மண்ணில் தவழ ஆரம்பித்தது. மனிதயேமற்ற சிங்கள அரசுகளினால் கொன்றொழிக்கப்பட்ட அப்பாவித்தமிழ்மக்களின் ஆன்மாவின்மீது வஞ்சினம்கொண்ட அன்றையஇளைஞர்களினால் செய்துகொள்ளப்பட்ட உறுதிமொழியின் அடையாளம்தான் துரையப்பாவின் மரணம்.
27.07.1975மாலை 06.00 மணிக்கு இலங்கை வானொலிச் செய்தி யிலும் 06.30மணிக்கு தமிழ்நாடு மாநிலச்செய்தியிலும் துரையப்பாவின் மரணம் செய்தியாக்கப்பட்டது. திருச்சி பொன்நகரில் அமைந்திருந்த போராளிகளின் தளத்தில் கூடியிருந்த போராட்டமுன்னோடிகளிடையே  ஆயுதக்குழுவின் முதல்தலைவரான பெரியசோதி கூறினார் ‘யாரும் இனி ஊகங்களை கதைக்காதீர்கள்.   ஆம் துரையப்பாவின் மரணத்தின்பின் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போர் ஊகங்களின்றி உறுதியானநிலையில் பிரபாகரன் காட்டியவழியில் வேகமாக நகரத்தொடங்கியது.
‘வருணகுலத்தான் பார்வையில்’ தொடரும் இக்கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களினால் படைக்கப்பட்டதுடன்,  2002ல்  தலைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டவையாகும்.

No comments:

Post a Comment